புதுடெல்லி: உயர் ரக கார்கள், புகையிலை, சிகரெட்டுகள், குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு 40 விழுக்காடு சிறப்பு வரி விதிக்கப்பட உள்ளது.
இந்த வரி உயர்வால் மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வழி பிறந்துள்ளதாக நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடல் பருமன் குறைப்பு நிபுணரும், பெங்களூரு ஆஸ்டர் ஒயிட்பீல்ட் மருத்துவமனை ஆலோசகருமான டாக்டர் பசவராஜ் எஸ். கம்பர், “மத்திய அரசு எடுத்துள்ள 40 விழுக்காடு சிறப்பு வரி முடிவை நாம் நிச்சயம் வரவேற்க வேண்டும்.
“உடல் பருமன் மற்றும் நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களுக்கு முக்கிய காரணிகளாக விளங்கும் சர்க்கரை, காஃபின் கொண்ட பானங்களை அதிகம் உட்கொள்வதைத் தடுப்பதற்காகவே இந்த வரி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
“புகையிலை, ஆல்கஹால், சர்க்கரை உணவுகள், கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள்மீதான பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வால் அதை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை நிச்சயமாகக் குறையும்.
“சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்களை அதிகம் உட்கொள்வதால் இளைஞர்களும் குழந்தைகளும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.
“நீரிழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுகின்றன.
“இந்த 40 விழுக்காடு வரி நடவடிக்கை மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உடல் பருமன் குறைப்பு நிபுணரும் ஜாந்த்ரா ஹெல்த்கேர் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் ராஜீவ் கோவில் கூறும்போது, “இந்தியாவில் உடல் பருமன், நீரிழிவு, இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானவை அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளும் போக்கினால் தூண்டப்படுகின்றன.
“இந்த பானங்கள் மீதான வரியை உயர்த்துவதன் மூலம், ஜிஎஸ்டி மன்றம் ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளது,” என்றார்.