‘ஏஐ’ கண்காட்சியில் 400 முன்னணி நிறுவனங்கள்

‘ஏஐ’ கண்காட்சியில் 400 முன்னணி நிறுவனங்கள்

1 mins read
562b52ed-6116-461f-97f0-7efd834a8427
டெல்லியில் பிப்ரவரி 14 முதல் 20ஆம் தேதிவரை ‘இந்தியா ஏஐ இம்பேக்ட் எக்ஸ்போ 2026’ கண்காட்சி நடைபெறுகிறது. - படம்: ஏஐ

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறவுள்ள ‘ஏஐ’ மாநாட்டுடன் கூடிய கண்காட்சியில் ‘ஓப்பன் ஏஐ’ உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

பிப்ரவரி 14 முதல் 20ஆம் தேதி வரை டெல்லியில் ‘இந்தியா ஏஐ இம்பேக்ட் எக்ஸ்போ 2026’ கண்காட்சி நடைபெற உள்ளது.

அதில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களின் தலைமை இயக்குநர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

‘ஏஐ’ சூழல் அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு இந்தக் கண்காட்சியும் மாநாடும் நல்ல பாலமாக அமையும் என்று பிடிஐ ஊடக முகவையிடம் அவர் குறிப்பிட்டார்.

இந்தியக் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல களமாக இந்தக் கண்காட்சி அமையும் என்றும் அதில் கூகல், ஓப்பன் ஏஐ, என்விடியா உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றும் அரவிந்த் குமார் தெரிவித்தார்.

புதுத் தொழில் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைப்பது இக்கண்காட்சியின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், அதற்கான சிறப்பு அமர்வுகள் நடைபெறும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு, அதன் தாக்கம் குறித்து விவாதிக்க ஏராளமான அமர்வுகளுக்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

மக்கள், வளர்ச்சி, புவி ஆகிய மூன்று முக்கியமான அம்சங்களை இந்த உச்சநிலை மாநாடு அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் ‘பிடிஐ’யிடம் அரவிந்த் குமார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்