1,000 ஆஸ்திரேலியா விசாவிற்கு 40,000 இந்தியர்கள் விண்ணப்பம்

2 mins read
efe65793-8376-4fdd-9c2a-ff91c1ddb1e7
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. - படம்: இந்தியா

புதுடெல்லி: ஆஸ்திரேலியா அறிவித்துள்ள புதுவகை விசாவைப் பெற இந்தியர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

‘வொர்க்கிங் ஹாலிடே மேக்கர்’ என்ற திட்டத்தின்கீழ் 1,000 பேருக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அவ்விசா குறித்த அறிவிப்பு வெளியான இரண்டு வாரங்களிலேயே ஏறத்தாழ 40,000 இந்தியர்கள் அதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக ஆஸ்திரேலியக் குடிநுழைவு துணை அமைச்சர் மேட் திசில்த்வெய்ட் தெரிவித்துள்ளார்.

அத்திட்டத்தின்கீழ், 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இந்தியர்கள் 12 மாதங்கள் வரையிலும் ஆஸ்திரேலியாவில் வசிக்கலாம், வேலை செய்யலாம், கல்வி கற்கலாம்.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

அவ்விசாவிற்கு இம்மாதம் 1ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. விசா கிடைப்போர் அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவில் தங்கலாம்.

ஆஸ்திரேலியப் பண்பாடு குறித்து அறிந்துகொள்ளவும் பல்வேறு துறைகளில் வேலை அனுபவம் பெறவும் இந்திய இளையர்களுக்கு இந்த விசா வாய்ப்பு வழங்குவதாகத் திரு திசில்த்வெய்ட் கூறினார்.

“அவ்விசாவின்கீழ் வருவோர் இந்த வேலைதான் செய்யவேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இதுவரையிலும் 1,000 விசாக்களுக்கு 40,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன,” என்றார் அவர்.

பெரும்பாலோர் விருந்தோம்பல், வேளாண்மைத் துறைகளில் வேலை செய்வர் என எதிர்பார்ப்பதாகக் கூறிய திரு திசில்த்வெய்ட், அவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சொன்னார்.

இந்த விசா திட்டம் ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் தற்போது ஏறத்தாழ ஒரு மில்லியன் இந்திய வம்சாவளியினர் வசித்து வருவதாகத் திரு திசில்த்வெய்ட் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்