தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எட்டு ஆண்டுகளில் 40,000 மரங்கள்; வறண்ட மலையில் மலர்ந்த பசுமை

2 mins read
790edbd2-bf5d-4751-b4c4-4f6fef89a875
ஒருகாலத்தில் இப்படி வறண்டு கிடந்த குன்று, இப்போது ‘கேஷர் பர்வதம்’ என்ற அடர்ந்த காடாக மாறியுள்ளது. - படங்கள்: என்டிடிவி
multi-img1 of 2

இந்தூர்: புல்கூட முளைக்காமல் வறண்டு தரிசாகக் கிடந்த மலைப்பகுதியை, இயற்கை ஆர்வலர்களைப் பெரிதும் ஈர்க்கும் பசுமை படர்ந்த எழில் கொஞ்சும் கானகமாக மாற்றியுள்ளார் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த டாக்டர் சங்கர் லால் கார்க் என்ற முன்னாள் கல்வி நிலைய முதல்வர்.

இப்போது 74 வயதாகும் திரு கார்க், உலக ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் இயக்குநராகவும் இருக்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் டாக்டர் கார்க்கும் அவருடைய குடும்பத்தினரும் தரிசாகக் கிடக்கும் ஒரு மலைப்பகுதியைக் காடாக மாற்றுவது என முடிவுசெய்தனர்.

அதன்படி, இந்தூர் மாவட்டத்திலுள்ள டாக்டர் அம்பேத்கர் நகர் என இப்போது அழைக்கப்படும் மஹூ எனும் நகரில் ஒரு சிறுகுன்றை அவர்கள் வாங்கினர். முதலில் அங்கு ஒரு கல்வி நிலையத்தைத் தொடங்கவே விரும்பிய அவர்கள் அவ்வெண்ணம் ஈடேறாமல் போகவே, பின்னர் தங்கள் திட்டத்தை மாற்றிக்கொண்டனர்.

முதலில் வேம்பு, அரசு, எலுமிச்சை மரங்களை அவர்கள் நட்டனர். பின்னர், 2016 ஜூலை முதல் 2024 ஆகஸ்ட் காலகட்டத்தில், படிப்படியாக 500க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 40,000 மரங்களை அவர்கள் நட்டனர்.

கல்ப விருட்சம், குங்குமப்பூ, உருத்திராட்சை, ஆப்பிள், டிராகன், ஆலிவ், லிச்சி, ஆப்பிரிக்க டூலிப், ஏலம் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.

கேஷர் பர்வதம் என அழைக்கப்படும் அக்காடு, தேக்கு, ரோஸ்வுட், சந்தனம், மகோகனி, ஆல், மூங்கில், வில்லோ உட்பட பலவகை மரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

தற்போது, அவற்றில் 15,000 மரங்கள் 12 அடிக்கும் மேலாக வளர்ந்துவிட்டன.

அவற்றுக்குக் கூடுதலாக உரம் எதையும் போடவில்லை என்றும் மழைநீரின் மூலம் கிடைக்கும் சத்துகளே அவற்றுக்குப் போதுமானதாக உள்ளது என்றும் டாக்டர் கார்க் தெரிவித்தார்.

குளிர்ப்பகுதியான காஷ்மீரில் வளரக்கூடிய செம்பொன் என அழைக்கப்படும் குங்குமப்பூவையும் வெப்பமான இந்தூரில் வளர்த்துச் சாதித்துக் காட்டியுள்ளார் அவர்.

வெப்பத்தை மட்டுமல்லாது நீர்ப் பற்றாக்குறையையும் அவர் எதிர்கொண்டார். 600 அடிக்கு மூன்று கிணறுகளைத் தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை.

அதனால், நீர்த்தொட்டியை அவர்கள் வாங்கிவைத்தனர். பின்னர் அங்கு ஒரு குளம் வெட்டப்பட்டு, நீர் சேகரிக்கப்பட்டது. சொட்டுநீர்ப் பாசன முறையில் மரங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.

அந்த அடர்ந்த காடானது பல்வேறு உயிரினங்களையும் ஈர்த்துள்ளது. தற்போது 30 வகைப் பறவைகள், 25 வகைப் பட்டாம்பூச்சிகள், நரி, மான், காட்டுப்பன்றி, முயல், கழுதைப்புலி போன்றவற்றின் இல்லமாகவும் அது திகழ்கிறது.

கேஷர் பர்வதத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்றுவரலாம். அங்கு கருத்தரங்கு, தியானக்கூடம், உணர்தோட்டம், உடற்குறையுள்ள குழந்தைகளுக்கான கிரிக்கெட் திடல் ஆகியவையும் உள்ளன.

மேலும் 10,000 மரங்களை நட்டு, சுற்றுச்சூழலையும் புவியையும் காப்பதே தமது குறிக்கோள் என்கிறார் டாக்டர் கார்க்.

குறிப்புச் சொற்கள்