சிகாகோ: அமெரிக்காவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களிடம் 400,000 டாலர் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட குற்றத்தில் தொடர்புடைய இந்திய ஆடவருக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீரவ் பட்டேல் என்ற அந்த 44 வயது ஆடவர் அமெரிக்காவில் கள்ளத்தனமாகக் குடியேறியதாகவும் கூறப்பட்டது.
“ஓட்டுநர் உரிமம் பெறும் நோக்கில் இல்லினோய் மாநிலத்திற்கு வந்ததை பட்டேல் ஒப்புக்கொண்டார். பின்னர் அதனைப் பயன்படுத்தி, மூத்த குடிமக்களிடம் அவர் மோசடி செய்தார். குற்றவாளியான அவரை அமெரிக்காவைவிட்டு வெளியேற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்வோம்,” என்று இல்லினோய் தெற்கு மாவட்ட அரசாங்கச் சட்ட அதிகாரி ஸ்டீவன் வெய்ன்ஹோஃப்ட் கூறினார்.
அரசாங்க அதிகாரிகள்போல் நடித்து அரங்கேற்றப்பட்ட அந்த மோசடிச் செயல் 2024 டிசம்பர் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது.
“முதியோரைக் குறிவைத்து, அவர்களுடைய அமேசான் கணக்குகள் குறித்த விவரங்கள் திருடப்பட்டதாகக் குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்கள் அரசாங்க அதிகாரிகளாக நடித்த மோசடிப் பேர்வழிகளைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதன்பின், அவர்களின் வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அமெரிக்கக் கருவூலக் கணக்குகளில் மாற்றுவதாகக் கூறி, திருடப்பட்டன. பின்னர் அவை இந்தியாவிலிருந்தபடி செயல்பட்ட மோசடிக்காரர்களின் கணக்குகளுக்கு மாற்றிவிடப்பட்டன,” என்று திரு ஸ்டீவன் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
மோசடிப் பேர்வழிகள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் வரையிலும் பாதிக்கப்பட்டவர்களைத் தொலைபேசிவழி தொடர்புகொண்டதாகவும் அதுபற்றி தங்கள் நண்பர்களிடம் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தால் குற்றம் செய்ததாகக் கருதப்படுவர் என மிரட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பட்டேல் பாதிக்கப்பட்ட முதியோரின் வீட்டிற்கு நேரில் சென்று பணத்தையும் சொத்துகளையும் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அப்படி ஒரு வேளையில், முதியவர் ஒருவரிடமிருந்து அவர் 77,000 டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைப் பெற்றார்.
சிகாகோ நகரைத் தளமாகக் கொண்டு, பட்டேல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அங்கிருந்து விஸ்கான்சின், இல்லினோய், இண்டியானா போன்ற இடங்களுக்குச் சென்று, முதியவர்களிடமிருந்து பணத்தையும் தங்கக் கட்டிகளையும் அவர் பெற்றதாகக் கூறப்பட்டது.