புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 4.1 கோடி குழந்தைகள் அதிக உடல் எடைப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாக ‘உலக உடல் பருமன் அறிக்கை 2026’ சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரித்து வரும் இந்த ஆபத்தான நிலையைத் தடுப்பதற்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைத் தடுக்கும் நோக்கில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய ஊட்டச்சத்து முகவையும் இணைந்து ‘லெட்ஸ் பிக்ஸ் அவர் ஃபுட்’ கூட்டமைப்பு புதிய கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
‘இந்தியாவில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உணவுச் சூழல்களை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைக் கொள்கை நடவடிக்கைகள்’ என்ற தலைப்பிலான இந்த வழிகாட்டுதல் ஆவணத்தை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் எம். சீனிவாஸ் புதுடெல்லியில் வெளியிட்டார்.
பாக்கெட் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக் குறிச்சொற்களைத் தெளிவாக வெளியிட வேண்டும் என்றும், விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட ஆரோக்கியமற்ற உணவுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும். மேலும், பள்ளிகள் மற்றும் அவற்றின் 50 மீட்டர் சுற்றளவுக்குள் ஆரோக்கியமற்ற உணவுகளை விற்பனை செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விதித்துள்ள தடையைத் தீவிரமான சோதனைகள்மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அதிகக் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்புள்ள உணவுகளுக்குத் தெளிவான சட்ட வரையறை இல்லாததால், விதிமுறைகளை அமல்படுத்துவதில் தாமதம் நிலவி வருகிறது. இதே நிலை நீடித்தால், 2030ஆம் ஆண்டிற்குள் உலகின் மொத்த சிறுவர் உடல் பருமனில் 11 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் இந்தியாவில் இருப்பர் என்ற அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையையும் அந்த அறிக்கை அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நாட்டின் மொத்த நோய் பாதிப்பில் 56.4 விழுக்காடு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலேயே ஏற்படுகிறது. எனவே, கல்விக்கூடங்களில் சத்தான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதும், மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசரத் தேவையாக மாறியுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.


