பராமரிப்புத் தொகை வழங்குவதற்காகக் கடன் வாங்கும் 42% ஆண்கள்: ஆய்வு

2 mins read
9d83cd1a-480d-48bd-be55-063c2bf1ded0
43 விழுக்காடு மணமுறிவு வழக்குகளில், திருமணத்திற்குப் பிறகு கணவர்களே முழு குடும்ப செலவுகளையும் ஏற்றுள்ளனர். - படம்: ஊடகம்

மணமுறிவு காரணமாக ஏற்படும் உணர்வுபூர்வமான பாதிப்பு குறித்து நாம் அனைவரும் அறிந்திருந்திருப்போம்.

இருப்பினும், மணமுறிவு வேண்டி நீதிமன்றம் செல்லும் இணையருக்கு ஏற்படும் பொருளியல் இழப்பு குறித்து ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ எனும் பொருளியல் இதழ் ஒன்று ஆய்வு நடத்தியது.

அதன் முடிவுகளை அண்மையில் அது வெளியிட்டது.

அதில், கிட்டத்தட்ட 42 விழுக்காட்டு ஆண்கள் மணமுறிவு நடவடிக்கைகளுக்காகவும் பராமரிப்புத் தொகை வழங்குவதற்காகவும் கடன் வாங்குவதாகத் தெரியவந்துள்ளது.

மணமுறிவால் ஏற்படும் பொருளியல் தாக்கம் குறித்து மணமுறிவு அதிகரித்து வரும் இந்திய நகரங்களைச் சேர்ந்த 1,258 பேரிடம் ஆறு மாதங்கள் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருமணச் செலவுகள் குறித்து விவாதிக்கும் பலரும் மணமுறிவு செய்வதால் ஏற்படும் நிதி இழப்புகள் குறித்து விவாதிப்பதில்லை என்றும் இந்தியாவில் விவாகரத்து என்பது கடுமையான மனநலப் பாதிப்பு, பொருளியல் தாக்கம், தொழில் தொடர்பான இடையூறுகள் எனப் பல விஷயங்களை உள்ளடக்கியது என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டது.

மேலும், மணமுறிவு செய்தவர்களில் 67 விழுக்காட்டினர் நிதி குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் 90 விழுக்காட்டினர் மாதம் ஒருமுறையாவது குடும்ப செலவுகளுக்கான பணம் குறித்து சண்டையிட்டுள்ளனர்.

43 விழுக்காடு மணமுறிவு வழக்குகளில், திருமணத்திற்குப் பிறகு கணவர்களே முழு குடும்ப செலவுகளையும் ஏற்றுள்ளனர்.

ஆண்களின் ஆண்டு வருமானத்தில் 38 விழுக்காடு பராமரிப்புத் தொகையாகச் செலவிடப்படுகிறது.

அதேபோல், திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளை ஏற்கும்போது பெண்களில் 23 விழுக்காட்டினர் மணமுறிவிற்குப் பின் வேறு நகரத்திற்கு இடம்பெயர்கின்றனர்.

பணிக்குச் செல்லும் பெண்களில் 16 விழுக்காட்டினர் தங்கள் வேலையில் தீவிரம் காட்டுவதைக் குறைத்துள்ளனர்.

30 விழுக்காட்டினர் தங்கள் பணியை விட்டு விலகுகின்றனர் என அந்த ஆய்வு கூறுகிறது.

பராமரிப்புத் தொகை தவிர மற்ற சட்டச் செலவுக்காகவும் (போக்குவரத்து, இடைக்கால பராமரிப்பு மற்றும் மனநலச் செலவுகள்) ₹5 லட்சத்திற்கு மேல் 16 விழுக்காட்டுப் பெண்களும் 49% ஆண்களும் செலவுசெய்வதாக அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்