எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்க வந்த 42 வயது நபர் மயங்கி விழுந்து மரணம்

2 mins read
061f7aa3-304e-4680-8805-25575658e008
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த 42 வயது அதிமுக தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்து மாண்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - கோபி நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அதிமுகவின் பிரம்மாண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கோபி அருகே கொண்டையம்பாளையம் பகுதியை சோ்ந்த அதிமுக தொண்டர் அா்ஜூனன், 43 பங்கேற்க வந்தார்.

எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பே பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு அவர் வந்து இருந்தார். மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் முத்து மகால் முன்பு சாலையில் நின்று கொண்டிருந்தபோது அர்ஜூனன் திடீரென மயங்கி விழுந்தாா்.

உடனடியாக அதிமுகவினர் அவரை மீட்டு அவசர வாகனத்தின் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இருப்பினும் மருத்துவமனையை அடைந்ததும் அவரை பரிசோதித்த மருத்துவர்களும் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கோபி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதே கூட்டத்தில் பேசிய பழனிசாமி, அதிமுகவிலிருந்து வெளியேறி விஜய்யின் தவெகவில் சேர்ந்த மூத்த தலைவர் கே. ஏ. செங்கோட்டையனை கட்சி நலன்களுக்கு எதிராகச் செயல்பட்ட ‘துரோகி’ எனச் சாடினார்.

ஈரோடு செங்கோட்டையனின் சொந்த ஊராகும்.

மேலும் பேசிய பழனிசாமி, எந்தவொரு தனிப்பட்ட நபரும் அல்லது எத்தகைய செல்வாக்குப் பெற்றவராக இருந்தாலும் அதிமுகவைப் பலவீனப்படுத்திவிட முடியாது என்றார்.

2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியை அதிமுக தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்