புதுடெல்லி: இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 44 விழுக்காடு ஏறக்குறைய 10 விழுக்காட்டுக் குடும்பங்கள் வசம் உள்ளது. அதேவேளையில், கிட்டத்தட்ட 46 விழுக்காடு கிராமப்புறக் குடும்பங்கள் ஒரு சென்ட் நிலம்கூட இல்லாதவர்களாக உள்ளனர்.
இந்தியாவின் கிராமப்புற நில உரிமை குறித்துப் பாரிசைத் தலைமையிடமாகக் கொண்ட உலகச் சமத்துவ ஆய்வகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது.
கிராமப் பகுதிகளில் நில உரிமையாளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஒரு கிராமத்தின் மொத்த நிலத்தில் சராசரியாக 12 விழுக்காடு நிலத்தை ஒரு பெரும் நில உரிமையாளர் மட்டுமே கட்டுப்படுத்துகிறார். பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் ஒரே ஒரு நில உரிமையாளரின் வசம் உள்ளது.
நில உரிமை ஏற்றத்தாழ்வில் முதலிடத்தில் கேரளா, இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 10 பெரிய மாநிலங்களில் உள்ள 2,70,000 கிராமங்களைச் சேர்ந்த 65 கோடி மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது இந்தியாவின் மொத்தக் கிராமப்புற மக்கள்தொகையில் 75 விழுக்காட்டை உள்ளடக்கியது.
மாநிலங்களுக்கு இடையேயான நிலப் பகிர்வை ஒப்பிடுகையில், நிலமற்றவர்களின் எண்ணிக்கை பஞ்சாபில் மிக அதிகம் (73%). விவசாயத்தைச் சார்ந்துள்ள மாநிலங்களான பீகாரில் 59 விழுக்காட்டுக் குடும்பங்களும் மத்திய பிரதேசத்தில் 51 விழுக்காட்டுக் குடும்பங்களும் நிலமற்ற நிலையில் உள்ளன.
முதலிடத்தில் கேரளா, இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு
நிலப் பகிர்வில் நிலவும் ஏற்றத்தாழ்வை அளவிடும் ‘ஜினி’ குறியீட்டின்படி, கேரளா 90 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் 80 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
வரலாற்று, பொருளியல் காரணங்களும் நில ஏற்றத்தாழ்வுக்கு பங்களிக்கின்றன
நிலத்தின் தரமும் சந்தை வாய்ப்புகளும் இந்த ஏற்றத்தாழ்வுக்குக் காரணமாகின்றன.
விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற வளமான நிலங்கள் உள்ள பகுதிகளில் நிலம் அதிகமாகவும், நிலமற்றவர்களின் எண்ணிக்கை கூடுதலாகவும் காணப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
நகரங்களுக்கு அருகிலோ, நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்களுக்கு அருகிலோ உள்ள கிராமங்களில் நில உரிமையில் சமமற்ற நிலை அதிகமாக உள்ளது.
வரலாற்று ரீதியான காரணங்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் நேரடியாக இருந்த பகுதிகளைவிட, சமஸ்தானங்களின்கீழ் இருந்த பகுதிகளில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், நிலப் பகிர்வு ஓரளவுக்குச் சிறப்பாகவும் உள்ளது. ஆனால், ஜமீன்தார் முறை வழக்கத்தில் இருந்த பகுதிகளில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், பெரிய நில உரிமையாளர்களின் ஆதிக்கம் வலுவாகவும் இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
‘இந்தியாவில் நில சமத்துவமின்மை: தன்மை, வரலாறு, சந்தைகள்’ என்ற தலைப்பில் பொருளியல் வல்லுநர்கள் இந்த ஆய்வறிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

