ஜார்க்கண்டில் 44 அரசு போட்டித் தேர்வுகள் ரத்து; அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு

ஜார்க்கண்டில் 44 அரசு போட்டித் தேர்வுகள் ரத்து; அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு

2 mins read
2f4c7385-655b-40b0-b2b9-c442f3727d1b
ஏறக்குறைய 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட அரசுத் தேர்வுகள் பல ரத்து செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

ராஞ்சி: அரசுத் தேர்வுகள் குறித்து தொடர்ந்து எழுந்த புகார்களை அடுத்து, ஜார்க்கண்ட் மாநில அரசு 44 போட்டித் தேர்வுகளை ரத்து செய்துள்ளது.

அரசுத் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை முன்வைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் ராஞ்சியில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி போராட்டம் நடத்திவரும் நிலையில், 15 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், 44 அரசுப் பணி நியமனத் தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மருந்து ஆய்வாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணை ஆட்சியர்கள், பல் மருத்துவர்கள், வனத்துறை அலுவலர்கள், உரிமையியல் நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கிய பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் அரசு ரத்து செய்துள்ள அரசுத் தேர்வுகளில் கடந்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட்ட அரசுப் பணித் தேர்வுகளும் அடங்கும்.

கடந்த காலங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் ‘டிஎஸ்ஆர் டேட்டா பிராசசிங்’ என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

தற்போதைய உத்தரவால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏறக்குறைய 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட அரசுத் தேர்வுகள் பல ரத்து செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு முறைகேடுகள் குறித்த வழக்குகளை விரைவாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் மூலம் ‘விரைவு நீதிமன்றம்’ அமைக்கப்படும் என்றும் தேர்வாணையத்தில் உள் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்றும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்வாணையச் சீர்திருத்தங்களுக்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு, இன்னும் இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜார்க்கண்ட்அரசுப்பணிதேர்வுரத்துஊழியர்கள்