ஒரே சிறையில் 44 பேருக்கு எச்ஐவி தொற்று

1 mins read
72f6ac58-eb69-4d1b-81b7-c2287b4aa8bd
படம்: Pixabay -

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் 44 கைதிகளுக்கு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் ஒரு பெண் கைதியும் அடங்குவார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து அம்மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஹல்த்வானியில் உள்ள அந்தச் சிறைச்சாலையில் 1,699 கைதிகள் உள்ளன. அவர்களில் 70 பேர் பெண் கைதிகளாவர்.

அண்மையில் கைதிகளில் சிலருக்கு அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறை மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் கைதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரியவந்தது.

பரிசோதனையில் ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது.

ஹல்த்வானி சிறைச்சாலையில் எச்ஐவி தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது பாதிப்புக்கு ஆளாகியுள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து கைதிகளுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்