டெல்லி: மகா கும்பமேளா விழாவிற்கு பிரயாக்ராஜ் நகரம் முழுமையாகத் தயாராகி விட்டதாகவும் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் உத்தரப் பிரதேச அமைச்சர் ஜே.பி.எஸ்.ரத்தோர் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆண்டுதோறும் கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதையொட்டி பிரயாக்ராஜ் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான துறவிகள் ஊர்வலமாக வந்து கும்பமேளா திடலில் முகாமிட்டு வருகின்றனர்.
முக்கிய நிகழ்வான ‘ராஜ குளியல்’ ஜனவரி 14, 29ஆம் தேதிகளிலும், பிப்ரவரி 3ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
மகா கும்பமேளாவில் பாதுகாப்பை அதிகரிக்க ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் கூடிய 2,700 கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறையினர் நிறுவியுள்ளனர். நீருக்கு அடியில் செல்லும் ‘ட்ரோன்’களையும் அதிகாரிகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளனர்.
“மகா கும்பமேளாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. கும்பமேளாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்,” என்று உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்தார்.