சென்னை: குப்பையில் கண்டெடுத்த 45 பவுன் தங்க நகைகளை ஆசைப்படாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஏழைத் தூய்மைப் பணியாளரை, காவலர்கள் குற்றவாளியைப் போல மணிக்கணக்கில் விசாரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பத்மா. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 11) தி.நகர் மகாராஜா சந்தானம் தெருவில் வழக்கம் போல் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பையோடு குப்பையாகக் கிடந்த ஒரு பையை எடுத்துப் பார்த்தார். அதற்குள் இருந்த ஐஸ்கிரீம் டப்பாவில் சுமார் 45 பவுன் தங்க நகைகள் இருப்பதைப் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த அந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவர் நினைத்திருந்தால் மறைத்திருக்கலாம். ஆனால், அந்தத் தாய் நேர்மையாகத் தன் மேற்பார்வையாளரிடம் அதை ஒப்படைத்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சேர்ப்பித்தார்.
நேர்மைக்குப் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அந்த எளிய தாய்க்கு, ஏமாற்றமே மிஞ்சியது. நகையை ஒப்படைத்த அவரை சட்டம் - ஒழுங்கு காவலரும் தொடர்ந்து குற்றப்பிரிவு ஆய்வாளரும் ஒரு குற்றவாளியைப் போலத் துருவித் துருவி விசாரித்துள்ளனர்.
மதியம் 3.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை, இரவு 7.30 மணியைத் தாண்டியும் நீண்டுகொண்டே சென்றது.
விஷயமறிந்து துடித்துப்போன சக பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் காவல் நிலையம் முன் திரண்டனர். “குப்பையில் கிடந்த நகையை நேர்மையாகக் கொண்டு வந்து கொடுத்தது ஒரு குற்றமா? அவரை ஏன் இப்படிச் சிறை வைத்து விசாரிக்கிறீர்கள்?” என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பினர்.
மேலும் அவர்கள் வேதனையுடன் கூறுகையில், “நாங்கள் ஆணையர் அலுவலகத்தில்தான் ஒப்படைக்க நினைத்தோம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என்று நேர்மையாக இங்கு வந்து கொடுத்தோம். ஆனால், காவலர்கள் எங்களை நடத்துவதைப் பார்த்தால், நேர்மைக்கு காலம் இல்லையோ என்று தோன்றுகிறது,” எனக் குமுறினர்.
தொடர்புடைய செய்திகள்
நேர்மையாகச் செயல்பட்ட ஒரு சாமானியப் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த நிலை, அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.

