புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ, 454 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்துள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் விண்வெளித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் வணிக செயற்கைக்கோள் பயன்பாடுகளின் வெற்றியை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்காக உலகளாவிய விண்வெளிச் சந்தையில் இந்தியா தனது போட்டியை முன்னிலைப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இஸ்ரோ மூலம் ஏழு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுள் ஒரு செயற்கைக்கோள், எதிரி நாடுகள், இந்தியாவின் கடல்சார் பகுதியைக் கண்காணிப்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் செயல்படும் என்றார்.
“மேலும், புவி கண்காணிப்பு, வணிக ரீதியிலான செயற்கைக்கோள் உட்பட ஏழு செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்றார் அவர். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013 வரை இந்தியாவில் இருந்து 31 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் உட்பட 54 செயற்கைக்கோள்கள் மட்டுமே ஏவப்பட்டன.
“தற்போது விண்வெளித்துறை பெருவளர்ச்சி கண்டுள்ள நிலையில், கடந்த 2014 நவம்பர் முதல் 2025 வரை 398 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் உட்பட 454 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவால் ஏவப்பட்டுள்ளன,” என்றார் அமைச்சர் ஜிதேந்திர சிங்.

