ரூ.46 கோடி வருமான வரி; ‘தாபா’ சமையல்காரர் அதிர்ச்சி

2 mins read
4689cb85-9c38-49d5-8b79-c20bd990e248
தாபா சமையல்காரர். இது, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மாதிரி படம். - படம்: ஏஐ

போபால்: ரூபாய் 46 கோடி வருமான வரி கட்ட வேண்டும் என்று கடிதம் வந்ததைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநில ‘தாபா’ சமையல்காரர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நவம்பரில் மற்றொரு வேலை செய்துகொண்டிருந்தபோது தனது ஆதார் அட்டை, வங்கி விவரங்களைப் பகிர்ந்துகொண்டதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது ரவிந்தர் சிங் சௌஹான், “நான் தாபா உணவகத்தில் பணியாற்றி வருகிறேன். ஆண்டு முழுவதும் என்னுடைய மொத்த சம்பளம் 3 லட்ச ரூபாயைத் தாண்டாது, எனக்கு எப்படி 46 கோடி வருமான வரி வரும்” என்றார்.

இதற்கிடையே இது குறித்து புகார் வந்துள்ளதை உறுதிப்படுத்திய மூத்த அதிகாரி ஒருவர், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யவிருக்கிறோம் என்று கூறினார்.

2019ல் குவாலியரில் ஒரு மெஸ்ஸில் உதவியாளராகப் பணியாற்றியபோது சௌஹான் தனது வங்கி, ஆதார் விவரங்களை மேலாளரிடம் வழங்கினார் என்று அவரது வழக்கறிஞர் பிரதுமான் சிங் படோரியா குறிப்பிட்டார்.

முதல் வருமான வரிக் கடிதம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி சௌஹானுக்கு வந்தது. ஆங்கிலத்தில் இருந்ததால் அவருக்கோ அவரது மனைவிக்கோ புரியவில்லை. ஜூலை 25ஆம் தேதி இரண்டாவது கடிதம் வந்தபோது அது என்ன என்று அவர் விசாரிக்கத் தொடங்கினார்.

அப்போதுதான் தனக்கு 46 கோடி ரூபாய் வருமான வரி விதிக்கப்பட்டதை அவர் அறிந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்