புதுடெல்லி: இந்தியாவில் சாதி அடிப்படையிலான கொடுமை, நில அபகரிப்பு, அரசாங்க வேலை ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக தேசிய பட்டியலின மக்கள் ஆணையத்திடம் (NCSC) கடந்த நான்காண்டுகளில் 47,000 புகார்கள் செய்யப்பட்டு உள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு ஆணையம் அளித்த பதிலில் இந்த விவரம் இடம்பெற்று உள்ளது.
2020-21ஆம் ஆண்டு 11,917 புகார்களும் 2021-22ல் 13,964 புகார்களும் 2022-23ல் 12,402 புகார்களும் இவ்வாண்டு இதுவரை 9,550 புகார்களும் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புகார்களில் பெரும்பாலானவை சாதி அடிப்படையிலான கொடுமைகள் தொடர்பானவை என்று ஆணையத்தின் தலைமை அதிகாரி கிஷோர் மக்வானா கூறினார்.
அதற்கு அடுத்ததாக, நிலம் தொடர்பான பூசல்கள், அரசாங்கச் சேவைத் துறைகளுக்குள் உள்ள பிரச்சினைகள் ஆகியன அந்தப் புகார்களில் இடம்பிடித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லா மாநிலங்களைக் காட்டிலும் சாதி அடிப்படையிலான புகார்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிகம் பதிவாகிறது என்றார் அந்த அதிகாரி.
“புகார்களை விரைவாகத் தீர்க்கும் முயற்சியில், அடுத்த மாதம் முதல் நானோ அல்லது எனது அணியினரோ அரசு அலுவலகங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வோம்,” என்றும் அவர் கூறினார்.
ஆணையம் ஒவ்வொரு நாளும் 200 முதல் 300 வரையிலான புகார்களைப் பெறுவதாகவும் அவற்றில் பல ஒருசில நாள்களுக்குள் தீர்க்கப்பட்டுவிடுவதாகவும் திரு மக்வானா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தலித்துகள் என்று குறிக்கப்படும் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த தேசிய உதவி தொலைபேசித் தரவுகளின்படி, 602,177 அழைப்புகள் வந்துள்ளன.
அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட, அதாவது 310,623 புகார்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து செய்யப்பட்டு உள்ளன.

