புதுடெல்லி: இப்போதைய குளிர்காலத்தில் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கடந்த 56 நாள்களில் மட்டும் வீடற்ற 474 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்விவகாரத்தைத் தானாகவே முன்வந்து கையிலெடுத்துள்ளது.
இத்தனை பேர் உயிரிழந்தது தொடர்பில் ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி டெல்லி தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை ஆணையருக்கும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமையன்று (ஜனவரி 30) ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், “வீடற்றவர்களின் நல்வாழ்விற்காகப் பணியாற்றி வரும் முழு வளர்ச்சிக்கான நிலையம் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு, டெல்லியில் இந்தக் குளிர்காலத்தில் மட்டும் 56 நாள்களில் 474 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறி, ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 2024 டிசம்பர் 15 - 2025 ஜனவரி 10 காலகட்டத்தில் அந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
“உரிய ஆடைகள், தங்குமிடம் போன்ற இன்றியமையாத் தேவைகள் இல்லாத காரணத்தினாலேயே அந்த இறப்புகள் நேர்ந்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் அடையாளம் காணப்படாத சடலங்களில் 80 விழுக்காடு வீடற்றவர்களுடையவை என நம்பப்படுவதாக அவ்வமைப்பு கூறுகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையெனில், அவை கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதைக் காட்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 16ஆம் தேதியன்று அச்செய்தி அறிக்கை வெளியானது.
அதன்படி, டெல்லியிலுள்ள பல காப்பிடங்கள் அதிகரித்துவரும் தேவையை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகின்றன. அங்கு வெந்நீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் கிடைக்காததால் பலரும் குளிரில் வாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வீதிகளில் வசிப்போர் சுவாசத் தொற்று, தோல் நோய்கள், மனநல பாதிப்பு போன்ற பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.