பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த ஏறக்குறைய 48 அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக, ‘ஹனி டிராப்’ (honey trap) எனப்படும் பாலியல் வலை விரிக்கும் மோசடி நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரை அடுத்து, புது சர்ச்சை வெடித்துள்ளது.
பாலியல் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாக அமைச்சர் கே.என்.ராஜண்ணா சட்டப்பேரவையில் பேசும்போது குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த மோசடி குறித்து உடனடியாக நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
பெண்களைப் பயன்படுத்தி ஒருவரைப் பாலியல் சர்ச்சையில் சிக்கவைக்கும் மோசடியை ‘ஹனி டிராப்’ என்று குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய வலையில் சிக்கி, உலகம் முழுவதும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
தற்போது கர்நாடக அரசியல் களத்தையும் ‘ஹனி டிராப்’ விவகாரம் ஆட்டிப்படைக்கிறது.
மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற வரவுசெலவு திட்ட விவாதத்தின்போது பேசிய கர்நாடக மாநில கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, தமக்கு மட்டுமல்லாமல், அம்மாநிலத்தைச் சேர்ந்த 48 அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகப் பாலியல் வலை விரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியமான புள்ளிகள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர் என்றும் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
அமைச்சர் பேசி முடித்ததும், பாலியல் வலைவிரிப்பு தொடர்பாகத் தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு பாஜக உறுப்பினர்கள் சில குறுந்தட்டுகளை (சிடி) அவையில் காண்பித்தனர்.
மேலும், பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு, தங்களிடம் இருந்த காகிதங்களையும் அவர்கள் கிழித்து வீசினர்.
“இது ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல. மக்களுக்காக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி,” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.
“இத்தகைய மோசடியில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ராஜண்ணா தனக்கு எதிராகப் பாலியல் வலையை விரித்தது யார் என்று சொல்லவில்லை. அவர் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்,” என முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்புத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.