கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய 4,800 பேர் பங்ளாதேஷுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தின் பல்வேறு மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து 836 பேர் நாடுகடத்தப்பட காத்திருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் சட்டவிரோதக் குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பிடிபடுவோர் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-பங்ளாதேஷ் இடையேயான மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு வேலி அமைக்கத் தேவைப்படும் நிலம் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சுவேந்து தெரிவித்தார்.
நில ஒப்படைப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும், அது நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியம் என்றும் குறிப்பிட்ட அவர், அனைத்துலக எல்லையைப் பாதுகாப்பதற்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சட்டவிரோதக் குடியேறிகள் பிடிபட்ட பின்னர் நேரடியாக எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் வராத சட்டவிரோதக் குடியேறிகளே மத்திய அரசின் உத்தரவுப்படி, நாடுகடத்தப்படுவதாக முதல்வர் சுவேந்து தெரிவித்தார்.
“நாட்டின் பிற மாநிலங்களிலும் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், மேற்கு வங்கத்தில் இருந்த முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசு அதைச் செயல்படுத்தவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“சட்டவிரோதக் குடியேறிகள் மாநிலச் சிறைகளில் அடைக்கப்பட்டு, வரி செலுத்துவோரின் செலவில் வசதிகளைப் பெற்று வந்தனர்,” என்றார் முதல்வர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹகிம்பூர் எல்லைப் பகுதியில் தற்போது மக்கள் நடமாட்டம் முன்பைவிட அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மேற்கு வங்க அரசின் தீவிர நடவடிக்கை காரணமாகப் பல சட்டவிரோதக் குடியேறிகள் தாங்களாக வெளியேறிவிட்டதாகவும் அதுவே மக்கள் நடமாட்டம் அதிகரிக்கக் காரணம் என்றும் தெரிவித்தார்.

