ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்

1 mins read
25547e70-d6c3-4ed4-a811-4367e338377f
நடிகர் சல்மான் கான். - கோப்புப் படம்: ஊடகம்

மும்பை: நடிகர் சல்மான் கான் மீதான கொலை முயற்சியைக் கைவிடுவதற்கு ரூ. 5 கோடி கேட்டு புதிய மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல பிஷ்னோய் அமைப்பினர் கடந்த ஜூன் மாதம் சதித்திட்டம் தீட்டினர்.

இதற்கிடையே, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுகா என்பவர் ஹரியானாவின் பானிபட்டில் புதன்கிழமை (அக். 16) கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு அனுப்பப்பட்ட ஒரு வாட்ஸ்அப் செய்தியில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தச் செய்தியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்கவும், லாரன்ஸ் பிஷ்னோயுடனான பகைமையை முடிவுக்குக் கொண்டுவரவும் ரூ. 5 கோடி செலுத்த வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், சல்மான் கானின் நிலை, கடந்த வாரம் கொல்லப்பட்ட பாபா சித்திகியைவிட மோசமானதாக இருக்கும்,’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சல்மான் கான் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில், அபூர்வ வகை மானை வேட்டையாடினார். அவரால் கொல்லப்பட்ட மான் வகை, வடமாநிலங்களில் வாழும் பிஷ்னோய் இன மக்களால் தெய்வமாகக் கருதப்படுகிறது.

மான்களைக் கொன்றதற்காக சல்மான் கான் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இல்லையெனில் அவர் கொலை செய்யப்படுவார் என்று பிஷ்னோய் அமைப்பினர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், இன்றுவரையில் சல்மான் கான் மன்னிப்பு கோரவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்