லக்னோ: ஒரு பெண், அவரது நான்கு மகள்கள் என ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்து உள்ளது.
புத்தாண்டு தினமான புதன்கிழமை (ஜனவரி 1) காலையில் ஹோட்டல் அறை ஒன்றில் அந்த ஐவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சம்பவம் தொடர்பில் கொலையுண்ட பெண்ணின் மகன் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் அவரது பெயர் அர்ஷத், 24, என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
ஆக்ராவைச் சேர்ந்த அந்தக் குடும்பம் புத்தாண்டைக் கொண்டாட லக்னோவுக்குச் சென்றதும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 30) முதல் அவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
லக்னோ நகரின் நாகா என்னும் பகுதியில் உள்ள ஷரன்ஜித் ஹோட்டலில் உள்ள ஓர் அறையில் அவர்கள் சடலமாகக் காணப்பட்டனர்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் அஸ்மா என்றும் அவரது நான்கு மகள்களின் வயது 19, 18, 16, 9 என்றும் காவல்துறை கூறியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேல்விவரங்களை காவல்துறை திரட்டி வருகிறது.
குடும்பப் பிரச்சினை காரணமாக கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக மத்திய லக்னோ காவல்துறை துணை ஆணையர் ரவீணா தியாகி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஐவரின் மணிக்கட்டுகளிலும் வெட்டுக்காயங்களும் அவர்களின் உடைகளில் ரத்தக்கறையும் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
கொலைகளை காணொளியாகப் பதிவுசெய்து அதனை இணையத்தில் வெளியிட்ட அர்ஷத், அந்தக் கொலைகளை செய்தது எப்படி என்று அதில் விளக்கி உள்ளார்.
அண்டை வீட்டுக்காரர்களால் தமது குடும்பம் தொல்லைக்கு ஆளானதாகவும் தமக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்ததாகவும் அந்த பயம் காரணமாக தமது குடும்பத்தினரைக் கொன்றதாகவும் அர்ஷத் கூறியுள்ளார்.
முதலில் தமது தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துக் கொன்றபின் அவரது வாயில் துணியை வைத்து அடைத்ததாகவும் தமது நான்கு சகோதரிகளின் வாயையும் துணியால் அடைத்து அவர்களின் மணிக்கட்டை பிளேடால் கீறியதாகவும் அவர் காணொளியில் தெரிவித்து உள்ளார்.
அந்தக் கொலைகளுக்கு அர்ஷத்தின் தந்தை உதவியிருக்கிறார். சம்பவத்திற்குப் பின்னர் அவரை ரயில்வே நிலையம் ஒன்றில் இறக்கி விட்ட பின்னர் நேராகக் காவல்நிலையம் சென்று நடந்தவற்றை விளக்கினார் அர்ஷத்.
“குற்றம் நிகழ்வதற்கு முன்னர் கடுமையான வாக்குவாதம் நடந்தது தெரிய வந்து உள்ளது. விசாரணை முடிவுற்ற பின்னரே உண்மை வெளிவரும்,” என்று திருவாட்டி ரவீணா கூறினார்.
இதற்கிடையே, அர்ஷத்தின் தந்தை பதர் என்பவர் தேடப்படுகிறார்.