ரஷ்யா-உக்ரேன் போர்க்களத்தில் 50 இந்தியர்கள்: மீட்பதில் இந்திய அரசு மும்முரம்

2 mins read
dcb0c6c2-7116-430a-8d44-53d5ed7484e6
மஜோதி சாஹில். - படம்: ரெடிட்
multi-img1 of 2

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரேன் இடையே நடைபெற்று வரும் போரில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்களை ரஷ்யாவில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ரஷ்ய ராணுவத்தில் இதுவரை 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 26 பேர் மாண்டுவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

ஏழு பேர் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை என்றும் இதுவரை 119 பேர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

உயிரிழந்த 26 பேரில், 10 பேர் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டு பேருக்கு ரஷ்யாவிலேயே இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் அடையாளத்தை உறுதிசெய்ய குடும்ப உறுப்பினர்களின் மரபணு மாதிரிகள்‌ ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.

ரஷ்ய தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மீதமுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, விடுதலையை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் மேற்கல்வி, வேலை வாய்ப்புகளுக்காகச் செல்லும் இளையர்கள் பலர் முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு, உக்ரேனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இளையர்கள் சிலரது காணொளிகள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகின்றன.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் ரஷ்யாவில் சிக்கியுள்ள இளையர்களை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம், மோர்பி பகுதியைச் சேர்ந்த மஜோதி சாஹில் என்ற 23 வயது இளையர், தாம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு, உருக்கமான காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், தாம் உக்ரேன் ராணுவத்துக்கு எதிராகப் போராட ரஷ்ய ராணுவத்தால் ஒப்பந்த முறையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை மீட்பதற்கு இந்தியப் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போதை மருந்து வழக்கில் குற்றவாளி என ரஷ்ய நீதிமன்றத்தால் மஜோதிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றத்தை மறுத்த போதிலும், தாம் சிறையில் இருக்க விரும்பவில்லை என்றும் அதனால்தான் சிறையை விட்டு வெளியே வர, ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் மஜோதி பேசியுள்ள இக்காணொளியை உக்ரேன் ராணுவம் வெளியிட்டது. அவருக்கு 16 நாள்கள் மட்டுமே ரஷ்ய ராணுவம் பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு மேற்கல்விக்காக தாம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார் மஜோதி.

குறிப்புச் சொற்கள்