பேருந்து கவிழ்ந்து 50 பேர் காயம்; மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
0f920aae-a8ee-42d0-b1e6-ec2f248dbfeb
குப்புறக் கவிழ்ந்த பேருந்து பாரந்தூக்கியின் உதவியால் நிமிர்த்தப்பட்டு, பின்னர் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

கோழிக்கோடு: தனியார் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கிட்டத்தட்ட 50 பேர் காயமுற்றனர்.

இவ்விபத்து இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) மாலை 4 மணியளவில் நேர்ந்தது.

காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லியா மோல் என்ற அந்தத் தனியார் பேருந்து விபத்தில் சிக்குமுன் மோட்டார்சைக்கிள்மீது மோதியதாக மனோரமா ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. அந்த மோட்டார்சைக்கிளோட்டி ஒரு காரை முந்திச் சென்று, பின்னர் பேருந்துத் தடத்தில் புகுந்ததாகச் சொல்லப்படுகிறது.

அவர்மீது மோதாமல் தவிர்க்க பேருந்து ஓட்டுநர் முயன்றதாகவும் அப்போது அது அங்கிருந்த பாலத்தின் தடுப்புச்சுவர்மீது மோதியதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், அப்பேருந்து மோட்டார்சைக்கிள்மீது மோதியதால் அதனை ஓட்டிச் சென்றவர் கடுமையாகக் காயமுற்றார் என்றும் அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், முகம்மது சானி, 27, என்ற அந்த இளையர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்துவிட்டார்.

பேருந்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமுற்றது. அதிலிருந்து டீசல் கசிந்து, சாலையில் ஓடியது.

பின்னர் தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து, கவிழ்ந்த பேருந்தைப் பாரந்தூக்கியுடன் துணையுடன் நிமிர்த்தி, சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்