கட்சி தாவும் 50 எம்எல்ஏக்கள்: பாஜகவைச் சாடும் மம்தா

கட்சி தாவும் 50 எம்எல்ஏக்கள்: பாஜகவைச் சாடும் மம்தா

2 mins read
31b99345-6265-4c9c-9904-41b83421782e
ரிஜு தத்தாவைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததாக அறிவித்தார் மம்தா பானர்ஜி. - படம்: இந்து தமிழ் திசை

கோல்கத்தா: திரிணா​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்தியாவின் மேற்கு வங்க மாநில அரசியல் களத்தில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்தத் திடீர் குழப்பத்துக்கு பாஜகதான் காரணம் என திரிணாமூல் தலைவர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், தோல்வியடைந்த டிஎம்​சி தலைவர்கள், எம்எல்ஏக்கள் பலர் பாஜகவுக்குத் தாவ முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மேற்கு வங்கம் முழுவதும் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதுடன், டிஎம்​சி தலைவர்களும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், திரிணாமூல் தேசியச் செய்​தித் தொடர்​பாளரான ரிஜு தத்தா தனது குடும்பத்தை வன்முறைக் கும்பலிடம் இருந்து காப்பாற்றியதற்காக பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனால் கடும் கோபம் அடைந்த மம்தா பானர்ஜி, ரிஜுவைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ததாக அறிவித்தார். மேலும் சிலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோல்கத்தாவில் உள்ள ஒரு தங்குவிடுதியில் மம்தாவுக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.

அப்போது திரிணாமூல் எம்எல்ஏக்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அதிருப்தி அணிக்கு தலைமையேற்றுள்ள முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ரிஜு தத்தா ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுடன் ஐம்பது திரிணாமூல் எம்​எல்​ஏக்​கள் இணைந்து செயல்​படு​கின்​றனர். நாங்​கள்​தான் உண்​மை​யான திரிணாமூல் காங்​கிரஸ்.

“பெரும்​பான்மை எம்​எல்​ஏக்​கள் எங்​கள் வசம் இருப்​ப​தால், கட்​சி​யின் சின்​னத்தை நாங்​களே தக்க வைத்​துக்கொள்ள அனு​ம​திக்க வேண்​டும்,” என்றார் ரிஜு தத்தா.

மேலும், கட்சி ஆவணங்களில் இடம்பெற்றுள்ள பல நிர்வாகிகளின் கையெழுத்துகள் போலியானவை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அவர்களில் 50 பேர் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். எனவே, கட்சி இரண்டாகப் பிளவுபடும் அபாயம் நிலவுகிறது.

இதனிடையே, திரிணாமூல் கட்சி உறுப்பினர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கோல்கத்தாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா, சட்டமன்றத் தேர்தலில் 177 தொகுதிகளில் பாஜக முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்றதாகக் குற்றஞ்சாட்டினார்.

கட்சியைக் காப்பாற்ற ‘செய் அல்லது செத்துமடி’ என்ற வகையில் தொண்டர்களும் நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

சொந்தக் கட்சியினர் சிலரே தமக்கு எதிராகப் பணி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணி டெல்லியில் நடத்தவுள்ள ஆலோசனையின்போது முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்