வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் மூன்று இந்தியப் பெண்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நிறுவனராகவும் சமூக ஆர்வலராகவும் கோடீஸ்வரராகவும் உள்ளனர்.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள், தகவல் தொடர்பு, அறிவியல், அரசியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இவ்வுலகம் முழுவதிலும் ஐம்பது வயதுக்கு மேல் சாதனை படைத்து வரும் 50 பெண்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டது.
இதில் ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் ஆகிய மூன்று இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஊர்மிளா, 80, மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசிக்கிறார். முதிய வயதிலும் பல்வேறு சமையல் போட்டிகளிலும் பங்கேற்று விருதுகளை அவர் குவித்து வருகிறார்.
ஊறுகாய் மற்றும் தின்பண்டங்களில் தனது வியாபாரத்தை விரைவாக விரிவுபடுத்திய அவர், சமூக ஊடகங்களில் விசுவாசமிக்க பின்தொடர்பவர்களைக் குவித்தார்.
அத்துடன், 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது சமையல் அனுபவம் மூலம், மில்லியன் கணக்கான மக்களுக்கு அவர் ஊக்கமூட்டி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயோகான் நிறுவனத்தின் தலைவராக கிரண் மஜும்தார் ஷா (71) உள்ளார். நாட்டின் மிகச் சிறந்த பெண் தொழில் முனைவோரில் ஒருவராக அவர் வலம் வருகிறார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஷீலா படேல் (72), கடந்த 1984ல் தன்னார்வத் தொண்டு அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அவர் மேம்படுத்தி வருகிறார்.
ஷீலா படேலின் முயற்சியால் ஏழை குடும்பங்களுக்காக 11 அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதிலும் 33க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷீலா படேலின் தன்னார்வத் தொண்டு அமைப்பு சேவையாற்றி வருகிறது.