தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹரியானாவில் பாஜகவுக்கு 50 இடங்கள்

2 mins read
af15599b-7e7b-43f8-ab79-3a2599f5e52a
பிரதமர் மோடியை ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி புதன்கிழமை சந்தித்து வெற்றிச் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆரம்பக் கட்ட சுற்றுகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. சில மணிநேரத்தில் நிலவரம் மாறி, பல தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது.

இறுதியாக, பாஜக 48 இடங்களுடன் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் 37 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது.

அபய் சிங் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளா்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனா்.

அவர்களில் தேவேந்திர கட்யான், ராஜேஷ் ஜூன் ஆகிய இருவரும் புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர். அதனால், பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கை 50 ஆனது.

தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைவிட கூடுதலாக 4 இடங்களுடன் ஹரியானாவில் பாஜக அசுர பலம் பெற்று உள்ளது.

ஹரியானா மாநிலத்தைக் காங்கிரஸ் கைப்பற்றும் என்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகள் பொய்த்துவிட்டன.

90 இடங்களிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடா்ந்து மூன்றாவது முறையாக அந்தக் கட்சி வென்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

கடந்த 2014 பேரவைத் தோ்தலில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், 2019 தோ்தலில் அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அப்போது, 40 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, 10 இடங்களில் வென்ற ஜனநாயக ஜனதாக் கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

தற்போதைய வெற்றி மூலம் ஹரியானாவில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள முதல் கட்சி என்ற சாதனையை பாஜக படைத்துள்ளது.

தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

குறிப்புச் சொற்கள்