புதுடெல்லி: இந்தியாவில் 15 மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்கீடாக மொத்தம் ரூ.1115 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் செஹகான், நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு கூடி, இதற்கான ஒப்புதல் அளித்தது.
அதன்படி பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.
இது தவிர, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.115.67 கோடி பரிந்துரைக்கப்பட்டு தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தின்கீழ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 15 மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை தணிக்கும் நடவடிக்கையாக தேசியப் பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து ரூ.1,000 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடர் நிதி ஒதுக்கீடாக, மகாராஷ்டிராவுக்கு ரூ.100 கோடி, கேரளா, கர்நாடகாவுக்கு தலா 72 கோடி, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலா 139 கோடி, மேற்கு வங்காளத்துக்கு 50 கோடி, எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கென மொத்தம் 378 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

