அமராவதி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரூ500 நோட்டுகளை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போதுதான் நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாடு செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கியது. இதில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பழைய ரூ.500, ரூ. 1,000 நோட்டுகளை திரும்பப் பெற்று புதிய ரூ. 2,000 நோட்டுகளை கொண்டுவந்துள்ளீர்கள். தேவைப்பட்டால் அதிக மதிப்பிலான அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும். பதிலாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள், இதனால் கறுப்புப் பணத்தை ஒழிக்கலாம்,” என்று பிரதமரிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
“இந்த மாநாட்டிலும் மீண்டும் இதையே வலியுறுத்துகிறேன். ரூ.500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பதிலாக, பல நாடுகளில் டிஜிட்டல் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதனால் இந்தியாவிலும் அதனை ஊக்குவிக்க வேண்டும்,” என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய ரூ. 2,000, ரூ. 500 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
இதன்பின்னர் கடந்த 2023 மே மாதம் ரூ. 2,000 நோட்டுகளின் புழக்கத்தையும் மத்திய வங்கி நிறுத்தியது, தற்போது ரூ. 500 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் உள்ளன.

