சத்தீஸ்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 பேர் மீட்பு

சத்தீஸ்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,000 பேர் மீட்பு

படம்: பிடிஐ

27 Sep 2026 - 6:54 pm

2 mins read

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடந்த இரண்டு நாள்களில் ஏறக்குறைய 5,000 பேர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பஸ்தார், தம்தரி, பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர், பலோதாபஜார்-பதாபாரா, நாராயண்பூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.

மழையின் தீவிரம் தணிந்தபோதிலும், அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் மேல்நிலைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வருவதாலும் ஆற்று நீர்மட்டம் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டிய நிலையிலேயே உள்ளது.

பஸ்தார் மாவட்டத்தில் ஆட்சியர் ஆகாஷ் சிக்காரா, காவல் கண்காணிப்பாளர் ஷலப் சின்ஹா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.

தொங்காகாட் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 43 நிவாரண முகாம்களில், பாதிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்டோர்க்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

சோனார்பால் அருகே தேசிய நெடுஞ்சாலை 30ல் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து லாரிகளின் மேற்புரத்தில் தஞ்சமடைந்த ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தம்தரியில் 65 வயது ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் பாபுலால் சாஹு, 15 வயதுச் சிறுமி தாரானா நிஷாத் இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், குருத் பகுதியில் உள்ள ஆசிரமத்தில் சிக்கிய ஒன்பது பேர் மீட்கப்பட்டனர்.

பிலாஸ்பூரில் அர்பா நதியில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. துர்க் மாவட்டத்தில் 764 பேர் உயிருடன் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

ராய்ப்பூரின் அபான்பூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தங்ராம் வர்மா 5,000 ரூபாய் மதிப்பிலான நிவாரணக் காசோலைகளை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்
வெள்ளம்நிவாரணம்முகாம்கனமழைஆறு