புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பத்து ஆண்டுகளில் 1.8 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும் அவர்களில் 50 லட்சம் குழந்தைகள் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் டெல்லி காவல்துறை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
“2015ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 1.33 லட்சம் குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன,” என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது.
“எஞ்சிய 50,771 குழந்தைகளின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அந்தக் குழந்தைகள் எங்கே போயினர், அவர்களின் கதி என்ன என்பதும் மர்மமாக உள்ளது.
“காணாமல் போகும் குழந்தைகளில் மூவரில் ஒருவரைக் கண்டுபிடிக்க முடிவதில்லை,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில், 18,063 குழந்தைகள் காணாமல் போயினர். 2023ஆம் ஆண்டில் 18,197 பேரும் 2024ஆம் ஆண்டில் 19,047 பேரும் காணாமல் போயிருந்தனர். கொரோனா காலத்தில் மட்டும் சற்று குறைவாக 13 ஆயிரம் குழந்தைகள் மாயமானார்கள்.
காணாமல் போன குழந்தைகளில் ஆண் பிள்ளைகளைவிட சிறுமிகளும் பெண் குழந்தைகளுமே அதிகம் என்றும் கூறப்படுகிறது.
காணாமல் போவோரில் 82 விழுக்காட்டினர் 12க்கும் 18க்கும் இடைப்பட்ட வயதினர்.
இவ்வாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் மட்டும் டெல்லியில் 14,828 குழந்தைகள் காணாமல் போனதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு, அதாவது 7,385 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குழந்தைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பது தொடர்பாகக் காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

