புதுடெல்லி: களவைத் தடுக்க வேண்டிய காவலரே கள்வராகப் போன அதிர்ச்சி சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அரங்கேறியுள்ளது.
குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை வைக்கப்பட்டிருந்த காவல் நிலையச் சேமிப்பு அறையிலிருந்து ரூ.51 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பணத்தையும் திருடியதாகக் கூறி, குர்ஷித் என்ற தலைமைக் காவலரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட குர்ஷித், திருடிய நகை, பணத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை (மே 30) தலைமறைவானதை அடுத்து, அவரது குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது.
சேமிப்பறையிலிருந்து நகை, பணம் களவுபோனதை அதன் பொறுப்பதிகாரி கண்டறிந்தார். பின்னர் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளிகளை ஆராய்ந்தபோது குற்றமிழைத்தது குர்ஷித் என்பதை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
விரைந்து செயலில் இறங்கிய காவல்துறையின் சிறப்புப் பிரிவுக் குழு, மறுநாள் சனிக்கிழமையே குர்ஷித்தைக் கைதுசெய்தது.
வேறொரு சம்பவத்தில், 282 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி, டெல்லியின் திலக் நகர் பகுதியில் பதுங்கி இருந்த டேவிட் லியான் என்ற நைஜீரிய நாட்டவரைக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தது.