ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இதனையடுத்து, சனிக்கிழமை (பிப்ரவரி 7) நக்சலைட்டுகள் 51 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடைந்ததாகவும் அவர்களைப் பற்றித் தகவல் அளிப்போர்க்கு ரூ.1.61 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.
இதையடுத்து, நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. நக்சலைட்டுகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதால் அவ்வியக்கத்தைச் சேர்ந்த பலரும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தரில் 55 நக்சலைட்டுகள் சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒடிசா மாநிலத்திலும் 15 பேர் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து ‘ஏகே47’ வகைத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், மற்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

