புதுடெல்லி: இந்தியா முழுவதும் கல்லூரிகளில் நடைபெற்ற ‘ராக்கிங்’ எனப்படும் பகடிவதைக்கு 51 உயிர்கள் பலியாகிவிட்டன.
கடந்த மூன்றாண்டுகளில் அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய மூன்றாண்டுகளில் நிகழ்ந்த பகடிவதை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கல்விக்கூட வன்முறைக்கு எதிரான சங்கம் அந்த ஆய்வை நடத்தியது.
மூன்றாண்டு காலத்தில், தேசிய பகடிவதை எதிர்ப்பு உதவி எண்ணுக்கு 3,156 புகார்கள் வந்தன.
நாடு முழுவதும் உள்ள 1,946 கல்லூரிகளில் இருந்து அந்தப் புகார்கள் தெரிவிக்கப்பட்டதை ஆய்வு கண்டறிந்தது.
பகடிவதை நிலவரங்கள், அதிக ஆபத்து உள்ள கல்வி நிலையங்கள், பகடிவதை தொடர்பான சம்பவங்களின் கடுமை போன்றவற்றில் ஆய்வு கவனம் செலுத்தியது.
பகடிவதைச் சம்பவங்களில் மருத்துவக் கல்லூரிகளின் நிலவரம் கவலை தருவதாக உள்ளது என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பதிவான மொத்த புகார்களில் 38.6 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து தெரிவிக்கப்பட்டவை.
மேலும், கடுமையான புகார்களில் 35.4 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவை.
குறிப்பாக, 2022-2024 பகடிவதை மரணங்களில் 45.1 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகளில் நிகழ்ந்தவை.
மூன்றாண்டு காலத்தில் பகடிவதை தொடர்பாக 51 மரணங்கள் நிகழ்ந்ததாக திங்கட்கிழமை (மார்ச் 24) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை முக்கியமாகக் குறிப்பிட்டு உள்ளது.
மொத்த மாணவர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மருத்துவக் கல்லூரிகளில் நிகழ்ந்த பகடிவதைக் கொடுமைகள் 30 மடங்கு அதிகம் என்றும் அது கண்டறிந்துள்ளது.
தேசிய பகடிவதை எதிர்ப்பு உதவி எண்ணுக்கு மட்டும் 3,156 புகார்கள் வந்துள்ளன. இவை தவிர கல்லூரிகளின் நிர்வாகத்திடமும் காவல்நிலையங்களிலும் ஏராளமான பகடிவதை புகார்கள் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது.
“பகடிவதைக் கொடுமை இன்னும் கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பாகத் தெரிவிக்கப்படும் புகார்களின் எண்ணிக்கைக் குறைவு. தங்களுக்கு எதிரான பகடிவதை குறித்து புகார் தெரிவிக்க துணிச்சலுடன் மாணவர்கள் முன்வருவதில்லை. எனவே, உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
“அச்சம் காரணமாக பகடிவதையைப் பொறுத்துக்கொள்ளும் மாணவர்களே அதிகம். எதிர்காலம் கருதி அவர்கள் அந்தச் சம்பவங்களை மற்றவர்களிடம் தெரிவிப்பதில்லை,” என்று ஆய்வறிக்கையில் விளக்கப்பட்டு உள்ளது.