புதுடெல்லி: விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்கள், புதுவை யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும் புகார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் 5,000கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புகார்களின் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக 5,200க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளைக் கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்கள், ஊர்வலங்கள் குறித்துக் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தடை உத்தரவுகளுக்கு இணங்கவும், ஒலிபெருக்கிகள் அல்லது பிற வசதிகளுக்கான அவசிய அனுமதிகளைப் பெறவும் இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அரசின் கொள்கை முடிவுகளை வெளியிடும் விஷயத்தில் மத்திய அரசுக்கும் இந்தத் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.
அரசு, பொது, தனியார் சொத்துகளில் உள்ள தேர்தல் தொடர்பான வாசகங்கள் அல்லது படங்களை அகற்றுதல், எந்தவோர் அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது தேர்தல் தொடர்பான வேறு நபரோ அரசு வாகனங்கள் அல்லது அரசுக் குடியிருப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல், பொது நிதியைப் பயன்படுத்தி விளம்பரங்களை வெளியிடுவதற்குத் தடை விதித்தல் ஆகிய அறிவுறுத்தல்கள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், தனியாா் குடியிருப்புகளுக்கு வெளியே எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களோ அல்லது மறியல் போராட்டங்களோ நடத்தப்படக் கூடாது.
உரிமையாளரின் முன்அனுமதியின்றி, நிலங்கள், கட்டடங்கள் அல்லது சுவர்களில் கொடிகள், பதாகைகள் அல்லது சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அனுமதி இல்லை எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர்கள் தங்கள் கடமைகளைத் தேர்தல் பிரசாரத்துடன் இணைக்கவோ அல்லது அரசு இயந்திரம், வாகனங்கள் மற்றும் பணியாளர்களைப் பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ கூடாது எனவும் அவ்வாணையம் தெரிவித்துள்ளது.


