வளைகுடா நாடுகளிலிருந்து ஒரு வாரத்தில் 52,000 இந்தியக் குடிமக்கள் நாடு திரும்பினர்

வளைகுடா நாடுகளிலிருந்து ஒரு வாரத்தில் 52,000 இந்தியக் குடிமக்கள் நாடு திரும்பினர்

2 mins read
74ff898a-9f22-4689-a16a-2d33445cbef1
நாடு திரும்பிய இந்தியர்களில் சிலர். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: வளைகுடா நாடுகளிலிருந்து ஒரே வாரத்தில் ஏறக்குறைய 52,000 இந்தியக் குடிமக்கள் தாயகம் திரும்பிவிட்டனர்.

இவ்வேளையில், சம்பவ இடங்கள், தடை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் எல்லா விமான நிலையங்களிலும் அங்கீகரிக்கப்படாத படங்களை எடுக்க வேண்டாம் என அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரித்துள்ளது.

சென்ற சனிக்கிழமை பின்னேரத்தில் வெளியிட்ட தகவலில் மார்ச் 1 முதல் 7 வரை வளைகுடா வட்டாரத்திலிருந்து 52,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் 32,107 பேர் இந்திய விமானங்கள் மூலமாக நாடு திரும்பினர் என்று எக்ஸ் பதிவில் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டு இருந்தார்.

மேற்கு ஆசியா, வளைகுடா வட்டார நிலைமையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குகிறது. மேலும் அவ்வட்டாரத்தில் உள்ள அரசாங்கங்களுடன் இணைந்து தேவைப்படுவோருக்கு உதவி செய்து வருகிறோம்,” என்று வெளியுறவு அமைச்சு பதிவில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதே சமயத்தில் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டல்களையும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு இந்திய நாட்டவர்களுக்கு அது அறிவுறுத்தியது.

வளைகுடா வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை அமைக்கப்பட்டுள்ளதாக திரு ஜெய்ஸ்வால் மேலும் தெரிவித்தார்.

இவ்வாரம் இந்தப் பகுதிகளில் உள்ள ஆகாயவெளியின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வளைகுடாவிலிருந்து பயணிகள் திரும்புவதற்கு வசதியாக, திட்டமிடப்படாத விமானங்கள் உட்பட வணிக விமானங்களை தொடர்ந்து இயக்கி வருவதாகவும் அவர் சொன்னார்.

தற்போது வணிக விமானச் சேவைகள் கிடைக்காத நாடுகளில் உள்ள இந்தியர்கள் அருகிலுள்ள தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.

கடந்த சில நாள்களில் மோதல் தீவிரமடைந்து மற்ற நாடுகளுக்கு பரவுவதைக் குறிப்பிட்டு, கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியக் குடிமக்கள் வளைகுடா வட்டாரத்தில் வசித்து வருவதாகவும், வேலை செய்வதாகவும் இந்திய அரசாங்கம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்