தினமும் 5.25 லட்சம் தேவையற்ற அழைப்புகள்: ‘ட்ரூகாலர்’ தகவல்

தினமும் 5.25 லட்சம் தேவையற்ற அழைப்புகள்: ‘ட்ரூகாலர்’ தகவல்

1 mins read
fbb80739-e567-44ed-b5cb-a60f472eb078
1600 மற்றும் 140ல் தொடங்கும் கைப்பேசி எண்களிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கக் கூடாது என்று ‘டிராய்’ உத்தரவிட்டுள்ளது. - படம்: த இக்கனாமிக்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் 1600 மற்றும் 140ல் தொடங்கும் கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி தினமும் பல லட்சம் தேவையற்ற அழைப்புகள் செய்யப்படுவதாக ‘ட்ரூகாலர்’ தலைமை நிர்வாக அதிகாரி ரிஷித் ஜுன்ஜுன்வாலா கூறியுள்ளார்.

‘டிராய்’ எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலை மீறி அத்தகைய அழைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தெரிவித்தார்.

அழைப்பாளர் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் ‘ட்ரூகாலர்’ செயலியைப் பயன்படுத்துவோரில் 5.25 லட்சம் பேர் தினமும் அந்த எண்களில் தொடங்கும் தேவையற்ற அழைப்புகளைச் சந்திப்பதாகக் கூறியுள்ளதாக ரிஷித் குறிப்பிட்டார்.

1600 மற்றும் 140ல் தொடங்கும் கைப்பேசி எண்களிலிருந்து வரும் அழைப்புகளைக் குறியிடுதல், வடிகட்டுதல் அல்லது தடுத்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது என டிராய் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், விளம்பரம் போன்ற தேவையற்ற அழைப்புகளைச் செய்வோர் ஆணையத்தின் அந்த உத்தரவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தங்கள் இலக்குகளைக் குறிவைப்பதாக ரிஷித் கூறியுள்ளார்.

140 என்ற எண் தொடரில் தொடங்கும் அழைப்புகள், பதிவுசெய்யப்பட்ட ‘டெலிமார்க்கெட்’ நிறுவனங்களின் பயன்பாட்டிற்கானது என டிராய் தெரிவித்துள்ளது.

‘தொந்தரவு செய்யாதே’ (DND) என்ற பொருளிலான பதிவேட்டில் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்வதன் மூலம், 140 தொடர் எண்களிலிருந்து வரும் விளம்பர அழைப்புகளை தடுக்கமுடியும் என்றும் அது குறிப்பிட்டது.

அதன்படி, 1600 மற்றும் 140 எண் தொடர்களில் தொடங்கும் எண்களிலிருந்து வரும் அழைப்புகளை வாடிக்கையாளர்களால் தேவையற்ற அழைப்பு (ஸ்பேம்), மோசடி அல்லது வேறு எந்த வகையாகவும் வகைப்படுத்த முடியாது.

குறிப்புச் சொற்கள்
கைப்பேசிஅழைப்புமோசடி