பெங்களூரு: கடந்த 53 ஆண்டுகளாக தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த இருதய நோய் நிபுணர் மருத்துவர் ரமண ராவ், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்கலா பகுதியில், கடந்த 1973ஆம் ஆண்டு மருத்துவர் ரமண ராவ் ஒரு இலவச மருத்துவமனையைத் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எவ்விதக் கட்டணமுமின்றி மக்களுக்கு மருத்துவச் சேவை ஆற்றி வருகிறார்.
அவரது இந்த மனிதநேயப் பணியில் இருதயவியல், கண் சிகிச்சை, தோல், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 35 தன்னார்வ மருத்துவ நிபுணர்களும் கைகோத்துள்ளனர். இங்கு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையின் மூலம், இதுவரை கிட்டத்தட்ட 33 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
மருத்துவர் ராவ்வின் இந்த ஈடு இணையற்ற சமூகப் பணியைப் பாராட்டும் விதமாக, கடந்த நவம்பர் 15ஆம் தேதி நெலமங்கலாவில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அவருக்கு கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா நேரில் கலந்துகொண்டு சான்றிதழை வழங்கியதுடன், கிராமப்புற ஏழை மக்களின் சுகாதாரத்திற்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த மருத்துவர் ரமண ராவிற்குப் புகழாரம் சூட்டினார்.
