பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவின்போது தங்கள் குடும்பத்தினரைவிட்டுப் பிரிந்த அல்லது காணாமல்போன 54,357 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் அவர்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கி, 45 நாள்களுக்குப்பின் பிப்ரவரி 26ஆம் தேதி அப்பெருவிழா முடிவடைந்தது. அவ்விழாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் ஏறக்குறைய 660 மில்லியன் பேர் புனித நீராடினர்.
அவர்களில் பலர் கூட்ட நெரிசல் காரணமாக தங்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் விட்டு விலகி, காணாமல் போயினர். அவர்களை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் தொண்டூழியர்களும் மீட்டு, பாதுகாப்பாகத் தங்க வைத்திருந்து, பின்னர் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்த்து வைத்தனர்.
மகா கும்பமேளாவின்போது பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான, முக அடையாள அமைப்புகளுடன் கூடிய பத்து மின்னிலக்க ‘தொலைந்து போனவர்களுக்கான மையங்கள்’ நிறுவப்பட்டன. காணாமல் போனவர்களை மீட்டு, உரியவர்களுடன் அவர்களைச் சேர்த்து வைப்பதே அவற்றின் நோக்கம். அவற்றின் வழியாக 35,000க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
பாரத் சேவா கேந்திரா, ஹேம்வதி நந்தன் பகுகுணா ஸ்மிருதி சமிதி மற்றும் பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்த மீட்பு முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபட்டன.
பாரத் சேவா கேந்திராவின் பூலே பாட்கே முகாமின் இயக்குநர் உமேஷ் சந்திர திவாரி கூறுகையில், தங்களது முகாம் மட்டும் மொத்தம் 19,274 பேரை அவர்களது குடும்பங்களுடன் வெற்றிகரமாக சேர்த்து வைத்ததாகவும் காணாமல் போனதாகக் கூறப்படும் 18 குழந்தைகளும் பாதுகாப்பாக அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.