புதுடெல்லி: இந்தியாவில் போக்குவரத்து விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த அண்மைய தரவுகளைத் தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் ஏறக்குறைய 1.98 லட்சம் பேர் சாலை, ரயில்வே விபத்துகளால் தங்களது உயிரை இழந்துள்ளனர்.
கடந்த 2023ல் 4.91 லட்சமாக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை, 2024ல் 4.95 லட்சமாக அதிகரித்துள்ளது.
விபத்துகளைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
மாநில வாரியான பட்டியல்
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் மாநிலங்களுக்கு இடையேயான வரிசைப் பட்டியலில் உத்தரப்பிரதேசம் 27,071 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.
20,390 உயிரிழப்புகளுடன் தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும் 19,475 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதிவேகம், தலைக்கவசம் அணியாமை, போக்குவரத்து விதிகளை மீறுவதே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே இந்த மரணங்களைத் தடுக்க முடியும் எனப் போக்குவரத்து வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

