ஹோர்முஸ் நீரிணையில் 562 இந்தியக் கடலோடிகள் 107 நாள்களாகச் சிக்கி தவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் 562 இந்தியக் கடலோடிகள் 107 நாள்களாகச் சிக்கி தவிப்பு

2 mins read
உடல்நலக்குறைவால் தமிழகக் கடலோடி உயிரிழப்பு
5d9f25a4-2864-4dfa-a67e-1898e64f2020
உடல்நலக்குறைவால் உயிரிழந்த தமிழகக் கடலோடி நிஷாந்த் உயிர்த்தநாதன், 35. - படம்: இந்தியா டுடே
multi-img1 of 2

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இந்தியக் கொடியுடன் கூடிய குறைந்தது 13 சரக்குக் கப்பல்களில் 562 இந்தியக் கடலோடிகள் கடந்த 107 நாள்களாகச் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்ததிலிருந்து அவர்களால் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியிலிருந்து வெளியேற முடியவில்லை.

கப்பல் போக்குவரத்து அமைச்சுத் தரவுகளின்படி, அவர்களில் 329 பேர் நீரிணைக்கு மேற்கேயும் 233 பேர் ஓமான் வளைகுடாப் பகுதியிலும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு சிக்கியிருந்த ‘எம்டி செலஸ்டியல்’ என்ற கப்பலில் உடல்நலக் குறைவால் 35 வயது நிஷாந்த் உயிர்த்தநாதன் என்ற தமிழகக் கடலோடி ஜூன் 11ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

அக்கப்பல் தற்போது ஓமானின் டூக்கம் துறைமுகத்தில் உள்ளது. நிஷாந்தின் குடும்பத்தினருடனும் கப்பல் மேலாண்மை நிறுவனத்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ஓமானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஓமான் கடற்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியக் கடலோடிகள் கொல்லப்பட்டு, பொதுமக்களிடமிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த சில நாள்களிலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

இதற்கிடையே, ‘விராத் 1’ என்ற மற்றோர் இந்தியக் கப்பல் ஓமான் கடற்பகுதியில் இயந்திரக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

அக்கப்பலில் இருந்த இந்தியக் கடலோடிகள் 14 பேரும் அவசரகாலப் படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேறினர். ஓமான் நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

போர்ச் சூழலால் அனைத்துலகக் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது.

அதனால், நூற்றுக்கணக்கான இந்தியக் கடலோடிகள் சிக்கலான சூழல்களில், உயிருக்கு அஞ்சியபடி கடலில் தவித்து வருவது இந்தியக் கப்பல் போக்குவரத்துத் துறையினரிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைப் பாதுகாப்பாக மீட்க தூதரக அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்கத் தரவுகளின்படி, உலகளவில் 300,000க்கும் மேற்பட்ட இந்தியக் கடலோடிகள் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய கிழக்கு வட்டாரத்தில் மட்டும் 18,000க்கும் மேற்பட்ட இந்தியக் கடலோடிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கப்பல் போக்குவரத்து அமைச்சு அதிகாரி ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்