புதுடெல்லி: இந்தியாவில் 2025-26ஆம் நிதியாண்டில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டிய குடிமக்களின் எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, நூறு கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டிய தனி நபர்களின் எண்ணிக்கையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது என்றார்.
இந்த எண்ணிக்கை 2022-23ல் 301ஆகவும் 2023-24ல் 284ஆகவும் 2024-25ல் 415ஆகவும் இருந்து தற்போது 2025-26ஆம் நிதியாண்டில் 576ஆக உயர்ந்துள்ளதாகவும் வருமான வரித்தாக்கல் கணக்குகளின்படி இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வருமான வரிச் சட்டப்படி ‘கோடீஸ்வரர்’ என்ற சொல்லுக்குச் சட்டபூர்வ வரையறை எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், கோடீஸ்வரர்களின் மொத்தச் சொத்து மதிப்பு குறித்த தரவுகளை அரசு பராமரிக்கவில்லை என்றார்.
அண்மைய குடும்ப நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பின்படி, கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் இரண்டிலுமே வருமான ஏற்றத் தாழ்வு குறைந்துள்ளது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 15 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் 2022ல் 3.6 விழுக்காடாக இருந்தது என்றும் தற்போது அது 3.1 விழுக்காடாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் தரவுகளின்படி கடந்த பத்து ஆண்டுகளில் வறுமை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்றும் தெரிவித்த அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, முற்போக்கான வருமான வரி நடைமுறை, வேலை வாய்ப்புடன் இணைக்கப்பட்ட வரிச் சலுகைகள், புதுத் தொழில்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான ஆதரவு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கிராமப்புற வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட நலத்திட்டங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் வளர்ச்சியை அரசு ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

