தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் 58,000 பாம்புக்கடி மரணங்கள்; உலகில் முதலிடம்

2 mins read
6c136160-eeaa-42cb-9f2c-22481062e13a
பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியா தேசிய செயற்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. - படம்: இணையம்

புதுடெல்லி: உலகளவில் இந்தியாவில்தான் ஆக அதிகமானோர் பாம்புக்கடி சம்பவங்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

அதிக பாம்புகள் இருப்பது, கிராமப்புறங்களில் அதிகமானோர் வசிப்பது உள்ளிட்டவை அதற்கான காரணங்களில் சில என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 58,000 பேர் பாம்புக்கடிக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமையால் பாதிக்கப்படுவோர், பழங்குடி மக்கள் ஆகியோரிடையே தாக்கம் அதிகமாக இருக்கிறது. தரமான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் அவர்களுக்கு அதிகம் கிடைக்காதது இதற்குக் காரணம்.

‘டைம் டு பைட் பேக்: கேட்டலைஸிங் எ குளோபல் ரெஸ்பான்ஸ் டு ஸ்னேக்பைட் என்வெனமிங்’ எனும் அந்த அறிக்கை நச்சுப்பாம்புக் கடிக்கு ஆளாவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. நச்சுப்பாம்புக் கடிக்கு ஆளாகி என்வெனமிங் எனும் நோய்க்கு ஆளாவதைத் தடுக்க இந்தியா தேசிய செயற்திட்டம் ஒன்றைத் தொடங்கியிருப்பதாகவும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடிக்குப் பலியாவோரின் எண்ணிக்கையைப் பாதியாக்குவது உலகச் சுகாதார நிறுவனத்தின் இலக்கு. அதைக் கருத்தில்கொண்டு இந்த விவகாரத்தில் தேர்ச்சி கணிக்கப்படுகிறது.

அந்த வகையில், பாம்புக்கடி மரணங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு அறிக்கை, உலக சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியா முன்னேற்றம் கண்டாலும் சவால்கள் தொடர்ந்து இருப்பதாக அது சுட்டியது.

அறிக்கையைத் தயாரித்தோரில் ஒருவரும் முன்னணி பொதுச் சுகாதார மருத்துவருமான யோகே‌ஷ் ஜெய்ன், தவிர்க்கக்கூடிய பாம்புக்கடிச் சம்பவங்களை இந்தியா இன்னமும் தவிர்க்காமல் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

“தகுந்த நடவடிக்கை எடுக்க சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு உகந்ததாக இல்லை. பலவேளைகளில் பாதிக்கப்பட்டோருக்கு சரியான வகையில் சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்குத் தேவையான பயிற்சி, கருவிகள், போதுமான நம்பிக்கை இருப்பதில்லை,” என்று டாக்டர் யோகே‌ஷ் ஜெய்ன் விவரித்தார்.

இந்தியா, பாம்புக்கடிக்கு ஆளாவதைக் கணக்கெடுப்பில் அடங்கும் நோயாக சென்ற ஆண்டு வகைப்படுத்தியது. அதன் தொடர்பிலான சுமையைக் குறைப்பது இலக்கு.

உலகளவில் பாம்புக்கடிக்குப் பலியாவோரில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்