புதுடெல்லி: மத்திய கிழக்கில் மோதல் நீடித்து வரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்ட 598,000 இந்திய குடிமக்கள் திரும்பியுள்ளதாக இந்திய அரசு புதன்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்தது.
விமானப் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருவதால் இந்த எண்ணிக்கை, வரும் நாள்களில் அதிகரிக்கக்கூடும் என வெளியுறவு அமைச்சின் கூடுதல் செயலாளர் (வளைகுடா) அஸீம் ஆர் மகாஜன் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 முதல், ஏறக்குறைய 598,000 பயணிகள் அப்பகுதியில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அமீரக சிற்றரசுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே விமான நிறுவனங்கள் குறைந்த அளவிலான திட்டமிடப்படாத விமானங்களைத் தொடர்ந்து இயக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை (மார்ச் 1) ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இருந்து இந்தியாவிற்கு சுமார் 90 விமானங்கள் இயக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சவூதி அரேபியா, ஓமானில் இருந்தும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
“கத்தாரில் வான்வெளி கட்டுப்பாடுகள் பகுதியளவு தளர்த்தப்படுவதால், கத்தார் ஏர்வேஸ் இந்தியாவிற்கு எட்டு முதல் பத்து சேவைகளை இயக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், குவைத், பஹ்ரைனில் வான்வெளி மூடப்பட்டே உள்ளது.
“எனினும், ஜசீரா ஏர்வேஸ், கல்ஃப் ஏர் ஆகியவை சவூதி அரேபியாவின் தம்மாமில் இருந்து இந்தியாவிற்கு திட்டமிடப்படாத விமானங்களை இயக்கி வருகின்றன,” என்று திரு மகாஜன் கூறினார்.
இதனிடையே ஈராக், குவைத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த இரு இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

