ஸ்ரீநகர்: இமயமலையில் ஏறக்குறைய 18,000 அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கு கைப்பேசிக்கான ‘5ஜி’ சேவையை அளித்து இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது.
காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கல்வான், சியாச்சின் ஆகிய இடங்களில், ‘5ஜி’ சேவை தொடங்கி இருப்பது அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
உலகின் மிக உயரமான போர்க்களமான, சியாச்சின் பனிப்பாறையில் 5ஜி அலைபேசி கோபுரத்தை வெற்றிகரமாக அமைத்திருப்பது வரலாற்றுச் சாதனை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
“இது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு பெரும் வசதியாக அமையும்,” என அதிகாரிகள் கூறினர்.
லடாக், கார்கில் ஆகிய மாவட்டங்களில் நான்கு முக்கிய கோபுரங்கள் உட்பட ஏராளமான கைப்பேசி கோபுரங்களை ராணுவம் அமைத்துள்ளது என்றும் நாட்டைப் பாதுகாக்க 18,000 அடி உயரத்தில், தனிமையில் இருக்கும் வீரர்களுக்கு 5ஜி சேவையானது மன உறுதி அளிப்பதுடன், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க உதவும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
கல்வான், டெம்சோக், சுமர், படாலிக், டிரஸ், சியாச்சின் பனிப்பாறை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் 4ஜி, 5ஜி வசதிகளுடன் கூடிய கைப்பேசி சேவை வழங்கப்படும் நிலையில், வலுவான கண்ணாடி இழை (ஃபைபர் ஆப்டிகல்) கேபிள் மூலம் இதற்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜம்மு, காஷ்மீரில் 5ஜி இணைய சேவை தொடங்கிவிட்டது. அப்போது ஒரு மில்லியன் வாடிக்கையாளர் இருப்பதாக பாரத்நெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
எனினும் 18,000 அடி உயரத்தில் உள்ள கல்வான் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்தச் சேவை விரிவுபடுத்தப்படவில்லை. தற்போது அது சாத்தியமாகி இருப்பது முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.