சென்னை: ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ வழங்கக் கோரி சென்னையில் நேற்று 5வது நாளாகப் போராட்டம் நடத்திய 1,500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. வெறும் ஒரு நாள் இடைவெளியில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் வித்தியாசம் இருப்பதால் ‘சம வேலை சம ஊதியம்’ கொடுக்கவேண்டும் என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிசம்பர் 26 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
நேற்று 5வது நாளாக எழும்பூரில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு 1,500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து 15 மண்டபங்களில் தங்க வைத்தனர்.
ஆசிரியர்களின் இந்தத் தொடர் போராட்டத்தால் காவலர்களுக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டம் குறித்து எஸ்எஸ்டிஏ இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “எங்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றித் தரவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.
“தெருத்தெருவாக ஆசிரியர்கள் சுற்றிவந்து போராடும் நிலை இருக்கிறது. ஆசிரியர்களை இதுபோல அவமானப்படுத்தும் செயல் வேறு எதுவும் இருக்காது. கடுமையான போராட்டங்களுக்குள் எங்களை இறக்குவதே காவல்துறைதான்,” என்றார்.

