மும்பை: கனமழை காரணமாகப் பயிர்கள் சேதமடைந்ததால் இழப்பீடு கோரிய தனக்கு ஆறு ரூபாய் மட்டுமே கிடைத்ததாக மகாராஷ்டிர விவசாயி ஒருவர் புகார் எழுப்பியுள்ளார்.
அகோலா மாவட்டத்தில் உள்ள தாவர்வாடி கிராமத்தைச் சேர்ந்த திகம்பர் சுதாகர் டாங்டே என்ற விவசாயியின் வங்கிக் கணக்கில் ஆறு ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு அவர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்த அம்மாநில அரசு, அதற்காக ரூ. 31,628 கோடியை ஒதுக்கியது.
இந்த அறிவிப்பை நம்பி விவசாயி திகம்பர் சுதாகரும் இழப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தார்.
அகோலா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் பயிர் இழப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
தனக்கும் அதேபோன்று இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த திகம்பர் சுதாகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவரது வங்கிக் கணக்கில் மாநில அரசு சார்பாக ஆறு ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் மிகுந்த வருத்தமடைந்த அவர், இந்தத் தொகையை வைத்து ஒரு தேநீர்கூட வாங்க முடியாது என்றும் இவ்வளவு குறைவாக இழப்பீடு வழங்கியதற்கு அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

