ஹைதராபாத்: ஹைதராபாத், ஹயாத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுவன்மீது பள்ளியின் இரும்புக்கதவு விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தான்.
முதலாம் வகுப்பு மாணவனான அஜய் ‘எம்பிபி’ பள்ளியில் உள்ள இரும்புக் கம்பிக் கதவின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். சில குழந்தைகள் இரும்புக் கதவின் மேல் ஏறி அதை அங்கும் இங்கும் ஆட்டியுள்ளனர். சரியாகப் பொருத்தப்பட்டிராத கதவின் நாதாங்கி கழன்றதில், கதவு சிறுவன் மீது விழுந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
ஜூலை 31ஆம் தேதி நடந்த இரும்புக் கதவு விழுந்த மற்றொரு சம்பவத்தில், கிரிஜா கணேஷ் ஷிண்டே என்ற மூன்றரை வயதுச் சிறுமி உயிரிழந்தாள்.
அந்த விபத்து வீடு ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியது.
கதவருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், அதை மூட முயன்றது காணொளியில் பதிவாகியுள்ளது. மற்றொரு பெண்ணுடன் கிரிஜா நடந்து சென்றபோது, திடீரென கதவு கழன்று விழுந்தது. குழந்தைகள் பயந்து ஓடினர். ஆனால், சிறுமி தப்பிக்க நேரமில்லாததால் விழுந்த கதவிற்கு அடியில் சிக்கி உயிரிழந்தாள்.