12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்

12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்

2 mins read
c17cb795-e497-417d-aa30-f6aacdc5ef62
இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தி்ல் மட்டும் இரண்டு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். - கோப்புப் படம்: தினமணி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களில் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆர்) மொத்தம் ஆறு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய 9 மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி ‘எஸ்ஐஆர்’ பணி தொடர்பான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டபோது, இந்த 12 மாநிலங்களின் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 51 கோடி என அறிவித்திருந்தது.

‘எஸ்ஐஆர்’ நடவடிக்கைக்குப் பிறகு மொத்த வாக்காளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 44.92 கோடி என அறிவிக்கப்பட்டது. இது முன்பைவிட ஏறக்குறைய 6.08 கோடி குறைவாகும்.

இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இரண்டு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13.29 கோடி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேநேரம் ஏறக்குறைய 84 லட்சம் வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா கூறினார். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் மட்டும் 3.29 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்தியாவில் முதற்கட்டமாக பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்பட்டு, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிறகு அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்தது.

தற்போது நடைபெற்று வரும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்த பிறகு, மீதமுள்ள 17 மாநிலங்கள், ஐந்து யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்