கோல்கத்தா: திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அக்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிகழ்வுக்குப் பெரும்பாலான எம்எல்ஏக்கள் வராதது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அண்மையில், அவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மேற்கு வங்கத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.
காலிகட் பகுதியில் உள்ள மம்தாவின் வீட்டில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மொத்தமுள்ள 80 திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 20 பேர் மட்டுமே அதில் கலந்துகொண்டனர். இது மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள திரிணாமூல் எம்எல்ஏக்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
மற்ற மாநிலங்களைப் போன்று மேற்குவங்கத்திலும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளும் கட்சிக்குத் தாவுகின்றனரோ? எனச் சந்தேகங்கள் எழுந்தன.
தொடர்புடைய செய்திகள்
திரிணாமூல் காங்கிரஸ் சொன்ன விளக்கம்
ஆனால், அரசியல் வன்முறைகள் தொடர்பாக அரசாங்கத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களை நடத்துவதில் தீவிரமாக உள்ளதால், பல எம்எல்ஏக்களால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனத் திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் பேச்சாளர் குனால் கோஷ், “மே 30ஆம் தேதி அபிஷேக் பானர்ஜிமீதும் மே 31ஆம் தேதி கல்யாண் பானர்ஜி மீதும் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாகவே எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவில்லை. முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக அடுத்த 48 மணி நேரத்திற்குப் போராட்டங்களைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

