கோல்கத்தா: சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும்கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மொத்தம் 80 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 60 எம்எல்ஏக்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ரிதப்ரதா பானர்ஜியைச் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்துள்ளனர்.
மேலும் சாந்தீபன் சஹா, சியோலி சஹா, சபினா யாஸ்மின் ஆகியோரைத் துணை எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் அக்ருஸ்ஸமானை தலைமைக் கொறடாவாகவும் நியமிக்கக் கோரும் கடிதத்தை அதிருப்தி அணியினர் சபாநாயகரிடம் வழங்கினர். அந்தக் கடிதத்தில் மொத்தம் 58 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கை மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார் மம்தா. இதனால் ஆட்சியை இழந்தாலும் மீண்டும் இடைத்தேர்தலில் களமிறங்கி எதிர்க்கட்சித் தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சொவன்தேப் சட்டோபாத்யாய் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இது தொடர்பாக சபாநாயகர் ரதிந்திர போஸிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில் காணப்படும் சில கையெழுத்துகள் போலியானவை என ரிதப்ரதா பானர்ஜி கூறினார்.
இதையடுத்து, அவரைக் கட்சியை விட்டு நீக்கினார் மம்தா. இது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. ரிதப்ரதா பானர்ஜிக்கு ஆதரவாக 60 எம்எல்ஏக்கள் திரண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். சட்டமன்றக் குழுவுக்குத் தலைமை ஆலோசகராக இருந்து மம்தா பானர்ஜி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் அவருக்குக் கடிதம் எழுத உள்ளோம்,” என்று ரிதப்ரதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

